முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
அரசியல்

கோட்டா கோ ஹோம்’ தாக்குதல்: மஹிந்த மீது குற்றப்பத்திரிகை இல்லை

‘அரகலய’ போராட்டத்தின் போது காலி முகத்திடலில் ‘கோட்டா கோ ஹோம்’ போராட்டக்காரர்கள் மீது 2022 மே மாதம் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல…

By Site Administrator2 நிமிட வாசிப்பு
கோட்டா கோ ஹோம்’ தாக்குதல்: மஹிந்த மீது குற்றப்பத்திரிகை இல்லை

‘அரகலய’ போராட்டத்தின் போது காலி முகத்திடலில் ‘கோட்டா கோ ஹோம்’ போராட்டக்காரர்கள் மீது 2022 மே மாதம் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாதிருக்க சட்டமா அதிபர் தீர்மானித்துள்ளதாக ‘தி சண்டே டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த தாக்குதல் இடம்பெற்றபோது, மஹிந்த ராஜபக்ஷ தனது சகோதரரான கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் பிரதமராக பதவி வகித்தார்.

இந்தத் தாக்குதலில் பல போராட்டக்காரர்கள் கடுமையாக காயமடைந்தனர். மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்கு விசாரணையாளர்களால் சமர்ப்பிக்கப்பட்ட சாட்சியங்கள் போதுமானதாக இல்லை என முடிவு செய்யப்பட்டதையடுத்து, அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அப்போதைய பிரதமருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்படாவிட்டாலும், நேரில் கண்ட சாட்சிகளின் வாக்குமூலங்கள், சூழ்நிலைச் சாட்சியங்கள் மற்றும் சம்பவ இடத்தில் பதிவான காணொளிக் காட்சிகள் தொடர்பான நிபுணர் ஆய்வுகளின் அடிப்படையில் மேலும் 34 சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அந்த 34 சந்தேகநபர்களில் மூவர் தற்போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, அரசியல் செயற்பாட்டாளர் டான் பிரியசாத் மற்றும் முன்னாள் தொழிற்சங்கத் தலைவர் வசந்த ஹந்தபாங்கொட ஆகியோர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

எஞ்சியுள்ள 31 சந்தேகநபர்களுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஒரே குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத ஒன்றுகூடலில் உறுப்பினர்களாக இருந்தமை, கொலை செய்ய முயற்சித்தமை மற்றும் கடுமையான காயங்களை ஏற்படுத்தியமை உள்ளிட்ட 327 குற்றச்சாட்டுகளின் கீழ் அவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரிப்பதற்காக மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழுவொன்றை நியமிக்குமாறு சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்க, பிரதம நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேனவிடம் கோரியுள்ளதாகவும் ‘தி சண்டே டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ள சந்தேகநபர்களில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், மொரட்டுவ முன்னாள் மேயர் சமன் லால் பெர்னாண்டோ, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக்க உள்ளிட்ட முன்னாள் அரசியல்வாதிகள் மற்றும் செயற்பாட்டாளர்கள் சிலரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்