சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜனைகாப்பாற்றுவதற்காக அரசாங்கம் தற்போது பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று (22) நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அமைச்சர், இந்த சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்த நாள் முதல் இராஜதந்திர மட்டத்திலும் இலங்கையின் வெளிநாட்டுத் தூதரகங்கள் ஊடாகவும் தேவையான தலையீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
அத்துடன், சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பு வழங்குமாறும் அல்லது அவருக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனையைத் தளர்த்துமாறும் கோரி ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் சவூதி மன்னருக்கு கடிதம் ஒன்றை அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
குறித்த கடிதத்தை சவூதி மன்னரிடம் கையளிப்பதற்காக பிரதி சபாநாயகர் தலைமையில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்றை சவூதி அரேபியாவுக்கு அனுப்ப அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, அனோஜனின் பெற்றோரை சந்தித்து இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளதுடன், சட்ட மற்றும் இராஜதந்திர ரீதியாக மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
மேலும், இந்த வழக்கு தொடர்பான சட்ட நடவடிக்கைகளுக்காக ஏற்படும் முழுச் செலவையும் அரசாங்கம் ஏற்க நடவடிக்கை எடுப்பதாகவும், இதுவரை அனோஜனின் குடும்பத்தினரால் செலவிடப்பட்டுள்ள தொடர்புடைய சட்டச் செலவுகளையும் மீளச் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதனுடன், ஜனாதிபதி சட்டத்தரணிகளான உபுல் குமாரப்பெரும மற்றும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா ஆகியோர் தங்களது சொந்த செலவில் இந்த விடயம் தொடர்பில் சட்ட உதவிகளை வழங்கி வருவதாகவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இதேவேளை, ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம் ஊடாக அனோஜனின் வழக்கைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், சவூதி அதிகாரிகளுடன் இராஜதந்திர வழிகளில் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு முன்னதாகத் தெரிவித்திருந்தது.




