முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
அரசியல்

நாமல் ராஜபக்ஷ 23ஆம் திகதி வரை விளக்கமறியலில்

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (16) உத்தரவிட்டுள்ளது. ஏர்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான பணச் சலவை குற்றச்சாட்டின்…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
நாமல் ராஜபக்ஷ 23ஆம் திகதி வரை விளக்கமறியலில்

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (16) உத்தரவிட்டுள்ளது.

ஏர்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான பணச் சலவை குற்றச்சாட்டின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்களுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளின் அறிக்கைகள் சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், சந்தேகநபர்களுக்கு எதிராக தாமதமின்றி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

ஏர்பஸ் நிறுவனம் மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு இடையில் 16 அகல உடற்பருமனுடைய விமானங்களைப் பெற்றுக்கொள்வது தொடர்பான கொடுக்கல் வாங்கலில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இலஞ்சம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

வியாபாரி நிமல் பெரேரா வழங்கியுள்ள சத்தியக்கடதாசியில் நாமல் ராஜபக்ஷவுடன் தொடர்புடையதாக அமெரிக்க டொலர் 800,000 பணம் வழங்கப்பட்டமை தொடர்பான தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இந்தத் தொகை இலங்கை நாணயத்தில் சுமார் 100 மில்லியன் ரூபாய் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், சர்வதேச உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட தடயவியல் விசாரணையில் நாமல் ராஜபக்ஷவுக்கும் ஏர்பஸ் நிறுவனத்திற்கும் இடையிலான கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான மின்னஞ்சல் செய்திகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டது.

சந்தேகநபர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா பிணை கோரிய நிலையில், பிரதி சொலிசிட்டர் ஜெனரல் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் பரிசீலித்த கோட்டை நீதவான், நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் 23ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்