நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று (16) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள நிலையில், நீதிமன்ற வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கான விமானங்களை கொள்வனவு செய்யும் நடவடிக்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் பணச்சலவைச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய நாமல் ராஜபக்ச இந்த வழக்கில் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளதுடன், அவரை செப்டெம்பர் 16ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கோட்டை நீதவான் முன்னதாக உத்தரவிட்டிருந்தார்.
எயார்பஸ் விமானக் கொள்வனவு நடவடிக்கையுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சுமார் 100 மில்லியன் ரூபாய் இலஞ்சத்தைப் பெற்றதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டின் பேரில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் நாமல் ராஜபக்ச செப்டெம்பர் 4ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் செப்டெம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.




