மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் தலைவர் ஓபாத விதானகே பிரசன்ன சஞ்சீவ இன்று (15) இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் பதவி வகித்த காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டு குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து இந்தக் கைது இடம்பெற்றுள்ளதாக இலஞ்ச ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் சட்டவிதிகளை மீறி, உரிய கேள்விப்பத்திர நடைமுறையைப் பின்பற்றாமல் பயணிகள் போக்குவரத்து அனுமதிப்பத்திரங்களை வழங்கியதாக விசாரணையாளர்கள் அவருக்கு எதிராகக் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்த முறைகேடான நடைமுறையின் மூலம் வெளித் தரப்பினருக்கு சட்டவிரோதமான அனுகூலம் வழங்கப்பட்டதுடன், அரசாங்கத்திற்கு 41 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக இலஞ்ச ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




