யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள பணச் சலவை வழக்கில் பொய்யான சாட்சியம் வழங்கியதாகக் கூறப்படும் முறைப்பாட்டுத் தரப்பு சாட்சியொருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, முறைப்பாட்டுத் தரப்பு சாட்சியான பாலித கமகே என்பவர் வழங்கிய சாட்சியம் தொடர்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
குறித்த சாட்சி முன்னதாக பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்திற்கு முரணாக நீதிமன்றத்தில் சாட்சியம் வழங்கியுள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
இதன்படி, பொய்யான சாட்சியம் வழங்கிய குற்றச்சாட்டின் கீழ் குறித்த சாட்சிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்த பின்னர், சாட்சியான பாலித கமகேவை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.




