முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
அரசியல்

‘கொண்ட ரஞ்சியை’ குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கைது செய்தது

கொலைகள், கப்பம் பெறுதல் மற்றும் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல கடுமையான குற்றச்செயல்கள் தொடர்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழுவின் தலைவரான ‘கொண்ட ரஞ்சி’ என அழைக்…

By Site Administrator2 நிமிட வாசிப்பு
‘கொண்ட ரஞ்சியை’ குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கைது செய்தது

கொலைகள், கப்பம் பெறுதல் மற்றும் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல கடுமையான குற்றச்செயல்கள் தொடர்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழுவின் தலைவரான ‘கொண்ட ரஞ்சி’ என அழைக்கப்படும் ரஞ்சித் குமார, துபாயிலிருந்து நாடு கடத்தப்பட்டதன் பின்னர் நேற்று (09) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளார்.

‘கொண்ட ரஞ்சி’ துபாயிலிருந்து நாடு கடத்தப்பட்டு இலங்கைக்கு அனுப்பப்படவுள்ளதாக துபாய் பொலிஸாரோ அல்லது அந்நாட்டு அரசாங்கமோ இலங்கை அதிகாரிகளுக்கு முன்கூட்டியே எந்தவொரு அறிவிப்பையும் வழங்கியிருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

அவர் நேற்று காலை சுமார் 8.10 மணியளவில் Flydubai விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தபோது, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் வழங்கிய தகவலின் அடிப்படையில் விமான நிலையத்தில் இருந்த குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அவரைக் கைது செய்துள்ளனர்.

பின்னர் கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தலைமையகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதுடன், 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்ற அனுமதியும் பெறப்பட்டுள்ளது.

கந்தானை பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் ஜீப் வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் தனிப்பட்ட செயலாளரையும் அவரது மைத்துனரையும் இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டை ‘கொண்ட ரஞ்சி’ வழிநடத்தியதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் தனிப்பட்ட செயலாளர் படுகாயமடைந்ததுடன், அவரது மைத்துனர் உயிரிழந்தார்.

இந்தக் கொலைக்கு மேலதிகமாக மேலும் பல கொலைகளும் ‘கொண்ட ரஞ்சி’யின் உத்தரவின் பேரில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

துபாயில் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்த அவர், முன்னதாக இத்தாலிக்கு தப்பிச் செல்ல முயன்றபோது துபாய் விமான நிலையத்தில் அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவினரிடம் சிக்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

துபாயில் பெருமளவில் முதலீடு செய்யும் நபர்களுக்கு வழங்கப்படும் Golden Visa அவரிடம் நீண்டகாலமாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்த ‘கொண்ட ரஞ்சி’, பல்வேறு போதைப்பொருட்களை இலங்கைக்கு அனுப்பும் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அவர் இரண்டாவது தடவையாக துபாய் பொலிஸாரிடம் சிக்கியது, அமெரிக்கா–ஈரான் யுத்தம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை சமூக ஊடகங்களில் பரப்பிய குற்றச்சாட்டின் பேரில் என தெரிவிக்கப்படுகிறது.

பல மாதங்களாக துபாய் அதிகாரிகளின் தடுப்புக்காவலில் இருந்த ‘கொண்ட ரஞ்சி’ நேற்று முன்தினம் இரவு அங்கிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளார்.

கந்தானை, நீர்கொழும்பு, வத்தளை, ஜா-எல, சீதுவ மற்றும் கட்டுநாயக்க ஆகிய பகுதிகளை மையமாகக் கொண்டு பாரியளவில் போதைப்பொருள் விநியோக வலையமைப்பை நடத்தி வந்ததாகவும் அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் உள்ளன. மேலும், அவர் பாதாள உலகக் குழுவொன்றுக்கும் தலைமை வகித்து வந்ததாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ‘கொண்ட ரஞ்சி’யிடம் நீண்ட நேரம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தலைமையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்