விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவுக்கு வீட்டிலிருந்து உணவு பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சேனக பல்லேதென்ன, நாமல் ராஜபக்ஷ தரப்பினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஏர்பஸ் விமானங்களை கொள்வனவு செய்யும் நடவடிக்கையில் இலஞ்சம் பெற்றதாக சந்தேகத்தின் பேரில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
இதனையடுத்து, அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையின் வாட்டைச் சுற்றி விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
அத்துடன், நாமல் ராஜபக்ஷவை சந்திப்பதற்கு நாளொன்றுக்கு மூன்று பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, நாமல் ராஜபக்ஷவின் தாயாரான ஷிரந்தி ராஜபக்ஷ இன்று (07) காலை வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்று அவருடைய நலன் விசாரித்ததாக ‘அத தெரண’ செய்தியாளர் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவும் இன்று காலை நாமல் ராஜபக்ஷவை சந்திப்பதற்காக வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றிருந்தார்.




