விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷவுக்கு எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதற்கான வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு கோரி, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் சட்டத்தரணி குஷானி ரோஹணதீரவுக்கு கடிதம் ஒன்றை அனுப்புவதற்கு தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கடிதம் நாளை நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளிக்கப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி வட்டாரங்களை மேற்கோள்காட்டி ‘லங்காதீப’ செய்தி வெளியிட்டுள்ளது.
நாமல் ராஜபக்ஷ தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள போதிலும், அவர் நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதற்கு சட்டரீதியான தடைகள் எதுவும் இல்லை என சட்டத்துறை வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, நாடாளுமன்றம் நாளை (08) முதல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை கூடவுள்ளது.
ஏர்பஸ் கொடுக்கல் வாங்கலின்போது இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ஷவை, எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம உத்தரவிட்டுள்ளார்.




