அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் இன்று (02) இரண்டாவது நாளாகவும் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
பிரதம நீதியரசர் ப்ரீதி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி, அர்ஜுன ஒபேசேகர, சம்பத் அபேகோன் மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோர் அடங்கிய ஐந்து நீதியரசர்கள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
தற்போது, குறித்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி மனுத் தாக்கல் செய்த தரப்பினர் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணிகள் தமது வாதங்களை முன்வைத்து வருகின்றனர்.
அவர்களின் வாதங்கள் நிறைவடைந்த பின்னர் இடையீட்டு மனுதாரர்கள் சார்பிலான சட்டத்தரணிகள் தமது சமர்ப்பணங்களை முன்வைக்க உள்ளனர். அதனைத் தொடர்ந்து சட்டமா அதிபர் குறித்த சட்டமூலத்தின் அரசியலமைப்புச் செல்லுபடித்தன்மை தொடர்பான வாதங்களை முன்வைக்க உள்ளார்.
நேற்று முற்பகல் ஆரம்பமான இந்த விசாரணை இரவு 10.30 மணி வரை சுமார் 12 மணித்தியாலங்கள் நடைபெற்றது.
கொழும்பு சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட பல தரப்பினர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், முன்மொழியப்பட்ட திருத்தம் அரசியலமைப்பின் 3வது உறுப்புரையையும் நீதித்துறையின் சுயாதீனத்தையும் பாதிக்கக்கூடும் என நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிப்பது போன்ற மாற்றங்களுக்கு பொதுமக்களின் வாக்கெடுப்பின் மூலம் அங்கீகாரம் பெறப்பட வேண்டும் என்றும் அவர் வாதிட்டார். இவ்வாறான அதிகாரத்தை பாராளுமன்றத்திற்கு மட்டுமே வழங்குவது எதிர்காலத்தில் நீதித்துறையின் சுயாதீனத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மற்றொரு மனுதாரரான முன்னாள் அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவும் நீதிமன்றத்தில் கருத்துத் தெரிவித்து, இந்த திருத்தம் நீதித்துறையின் சுயாதீனத்தை பலவீனப்படுத்தி மக்கள் இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என வாதிட்டார்.
இந்த திருத்தம் நிறைவேற்றப்பட வேண்டுமாயின் அது பொதுவாக்கெடுப்பின் மூலம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.




